விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு கருப்புக் கொடியேற்றி போராட்டம்…

First Published Oct 19, 2017, 8:51 AM IST
Highlights
Diwali bonus for agricultural laborers


திருநெல்வேலி

விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக் கொடியேற்றும் போராட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்தாண்டில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. இதனால், விவசாய தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி கடன் வாங்கி செலவு செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அரசு சார்பில் வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000 தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அரசு செவி சாய்க்காததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அரசின் இச்செயலைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு கருப்புக் கொடியேற்றும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தலைமைத் தாங்கி மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.நல்லதம்பி கருப்புக் கொடியேற்றினார்.

மாவட்டச் செயலர் எஸ்.காசிவிஸ்வநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கட்சி நிர்வாகிகள் எம்.எஸ்.பாலகிருஷ்ணன், சி.பண்டாரம், இ.ராமலிங்கம், இ.துர்க்கைமுத்து, ஆர்.துரை, பி.பால்தவசி, பி.ராமகிருஷ்ணன், டி.செல்வச்சாமி, என்.வெங்கடேஷ், இ.சுப்பையா, எஸ்.சண்முகசுந்தரம், எம்.சந்திரா, சுசிலா உள்பட பலர் பங்கேற்றனர்.

click me!