வங்கக் கடலில் உருவானது புயல் !! 28 தேதி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது மழை !!

By Selvanayagam PFirst Published Apr 25, 2019, 9:18 AM IST
Highlights

தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதியில் இன்று உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  நாளை தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இது புயலாக மாறி வரும் வரும் ஞாயிற்றுக் கிழமை தமிழகத்தை நோக்கி வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளது. எனினும் சில பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெறுவதாகவும், அது 29-ந் தேதி தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்தது. தற்போது  அது 28-ந் தேதியே தமிழக கடற்கரை பகுதியை நோக்கி புயல் வர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் இன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இந்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

இது 27, 28-ந் தேதிகளில் புயலாக வலுப்பெறும். அந்த புயல் தமிழக கடற்கரை பகுதியை நோக்கி  நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் இன்று  முதல் கடலுக்கு செல்ல வேண்டாம். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளுக்குள் வரும்போது சென்னை உள்பட பல இடங்களில் கன மழை இருக்கும். தற்போது வரை தமிழக கடற்கரை பகுதியை கடந்து செல்லலாம் அல்லது கடற்கரை பகுதியை ஒட்டியவாறு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்கரை பகுதியை கடந்து சென்றால், தென் தமிழகத்தின் பகுதியாக நுழைந்து கேரளாவுக்கு செல்லும். கடற்கரை பகுதியை ஒட்டியவாறு கடந்து சென்றால் ஆந்திராவை நோக்கி செல்லும்.

கடற்கரை பகுதியை ஒட்டி செல்லும்போது அதன் இடைவெளி 200 கிலோ மீட்டர் முதல் 300 கிலோ மீட்டர் என்று இருந்தால் மழை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!