
விழுப்புரம் திருவாமாத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் பேசுகையில்: அதிமுக எத்தனை பிரிவாக இருந்தால் உங்களுக்கு என்ன, அதிமுக ஒருங்கிணைப்புக்கு சாத்தியம் இல்லை. அதிமுக தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவரை கட்சியில் ஏன் சேர்க்க வேண்டும். அந்த கட்சி இணைய வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? என காட்டமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே நன்றாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மீண்டும் நகை கடன் தள்ளுபடி செய்வோம் என சொல்லி மக்களை ஏமாற்றக்கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்தார். கொரோனா காலத்திலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா விற்பனை போன்ற பிரச்சினைகள் குறித்து திமுக அரசு பேச மறுக்கிறது. சமூகநீதியைப் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிசாமி கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக முன்னேறி முதலமைச்சராக உயர்ந்தார்; ஆனால் திமுகவில் குடும்ப வாரிசுகள் மட்டுமே மேலேறுகிறார்கள் என்றார்.
அதிமுக வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு பரிசீலனை மேற்கொண்டு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது. 33 பொருட்களுக்கு வரி நீக்கப்பட்டுள்ளது. விவசாயப் பொருள்களின் வரி 18% இலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பஸ் கட்டணமும் மின்சார கட்டணமும் பலமுறை உயர்த்தப்பட்டதையும், சிமெண்ட் விலை பன்மடங்கு அதிகரித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இளையராஜா பாராட்டு விழாவின் ஒளிபரப்பை அரசு சன் டிவி வழியாக வழங்கியது குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்தார். நான் தான் சிறந்த முதல்வர் என்று அவரே அதனை சொல்லிக் கொள்ளக்கூடாது; அதனை மக்கள் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.