அப்படி போடு! காங்கிரஸை எப்படி அவமதிக்கலாம்? செந்தில் பாலாஜியை விளாசிய ஜோதி மணி! என்ன நடந்தது?

Published : Sep 24, 2025, 06:53 PM IST
Jothimani  vs Senthil Balaji

சுருக்கம்

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் கட்சியை அவமதித்ததாக கூறி அவருக்கு கரூர் எம்.பி காங்கிரசை சேர்ந்த ஜோதி மணி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கரூர் மகளிர் அணி தலைவி எஸ்.கவிதா, முன்னாள் அமைச்சரும், திமுகவின் கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது குறித்து செந்தில் பாலாஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழ்நாடு தலை நிமிர, மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் எஸ்.கவிதா தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்'' என்று கூறியிருந்தார்.

காங்கிரஸை அவமதித்த செந்தில் பாலாஜி?

இந்த ட்வீட்டில் செந்தில் பாலாஜி, ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து கவிதா திமுகவுக்கு வந்து இருப்பதாக கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படைய வைத்தது. காங்கிரஸில் தலைமை இல்லையா? கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியை எப்படி செந்தில் பாலாஜி அவமதிக்கலாம் என்று காங்கிரஸ் மகளிர் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன்பின்பு செந்தில் பாலாஜி அந்த பதிவை நீக்கினார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணியும் செந்தில் பாலாஜிக்கு கண்டம தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு ஜோதி மணி கண்டனம்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜோதி மணி கூறுகையில், ''சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.

காங்கிரசை அவமதிக்கலாமா?

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.

இனிமேல் இப்படி நடக்கக் கூடாது

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது. கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் செல்வப் பெருந்தகை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.

நம்முடைய பொறுப்பே இதுதான்

தமிழ்நாட்டின் மொழி, இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும்,பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்.

பின்குறிப்பு : தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து திரு. செந்தில் பாலாஜி அவர்களின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!