
தமிழகத்தில் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 56 வயதான பீலா வெங்கடேசன், தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளராக இருந்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்துள்ளது.
மூளை புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1997 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். மிக முக்கியமாக கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக மிகச்சிறப்பாக பணியாற்றினார். பீலா வெங்கடேசனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி ஆகும்.
பீலா வெங்கடேசின் தந்தை எல்.என்.வெங்கடேசன், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸ் என்பவரை 1992ம் ஆண்டு பீலா வெங்கடேசன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை கசப்பில் முடிந்தது. கணவர் ராஜேஷ் தாஸீடம் இருந்து விவகாரத்து கோரியிருந்தார். இதனால் பீலா ராஜேஷ் என்று இருந்த தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.