
கடலூர் மாவட்டத்தில் உள்ள தியாகவள்ளி, நொச்சிக்காடு உள்ளிட்ட சுமார் 15 சுற்றியுள்ள கிராம மக்கள், சிப்காட் (SIPCOT) விரிவாக்கத்திற்காக சுமார் 1,150 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் அரசின் அரசாணை 165-க்கு எதிராக தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நில எடுப்பு முயற்சியைக் கைவிடக் கோரி, கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் வங்காள விரிகுடா கடலின் அலையில் இறங்கி பிரம்மாண்ட மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தின் போது, அரசாணையை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் அடுத்தகட்டமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபட நேரிடும் என எச்சரித்து சிலர் கடலில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இயங்கி வரும் சிப்காட் தொழிற்சாலைகளால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து, கேன்சர் போன்ற கொடிய நோய்களும், மண் மற்றும் விவசாயப் பொருட்கள் நஞ்சாக மாறக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், 2004 சுனாமி பேரலையின் போது இயற்கை அரணாக தங்களைக் காத்த மணல் மேடுகளையும் வாழ்வாதாரத்தையும் அழித்து சிப்காட் அமைக்கக் கூடாது எனவும், உடனடியாக இந்த நில எடுப்பு திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.