கலெக்டர் போட்ட போடில் செம ஃபாஸ்ட்டா நடக்கும் வேலைகள் !! திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு !!

By Selvanayagam PFirst Published Oct 22, 2019, 7:50 AM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின்  எச்சரிக்கையால் பயந்து போன  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மூன்று நாட்களாக, இரவு - பகலாக பணியாற்றி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு, வீடு கட்ட ஆணை வழங்க நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.
 

திருவண்ணாமலை மாவட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்ட ஆணை வழங்காதது, வீடு கட்டுவோருக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பது போன்ற செயல்களில், பி.டி.ஓ.,க்கள் ஈடுபடுவதாக, கலெக்டர் கந்தசாமிக்கு புகார் சென்றது.

அதன் அடிப்படையில், கலெக்டர் கந்தசாமி, கடந்த  18 ஆம் தேதி  பி.டி.ஓ.,க்கள், 'வாட்ஸ் ஆப்' குழுவில், 'பயனாளிகளுக்கு, வீடு கட்டும் ஆணை, 21ம் தேதிக்குள் வழங்காவிட்டால், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவீர்' என எச்சரித்து, 'ஆடியோ' பதிவு அனுப்பி இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிடிஓக்கள் மற்றும் ஊழியர்கள்அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர். 

கலெக்டரின் எச்சரிக்கையை அடுத்து, பிடிஓக்கள் அனைவரும், மூன்று நாட்களாக, இரவு – பகலாக களப்பணியில் ஈடுபட்டு, வீடு கட்டும் பயனாளிகளுக்கு, ஆணைகளை வழங்கி வருகின்றனர்.
ஆணைகள் வழங்கிய விபரம் குறித்து, கலெக்டரின், 'வாட்ஸ் ஆப்' குழுவுக்கு பதிவுகளை அனுப்பி வருகின்றனர்.இதை பார்த்த கலெக்டர், அவரவரின் பணி திறமைக்கு ஏற்ப, 'கீப் இட் அப், வெல்டன், வாழ்த்துக்கள்' என, பாராட்டி பதிவிட்டு வருகிறார். அதே நேரத்தில் இதுவரை, எந்த, பி.டி.ஓ., மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் , பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என, கலெக்டர் குறிக்கோளாக உள்ளார்.

இதை வரவேற்கிறோம்.ஆனால், பட்டா இல்லாமல் இருப்போர், வயது முதிர்ந்தோர், வெளியூர் சென்றோர் போன்றவர்களுக்கு ஆணை வழங்க முடியாத நிலை, மணல் தட்டுப்பாடு போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன என தெரிவித்தனர்.

click me!