
கோவையில் குவிந்து தொழில்கள் : இந்தியாவின் மான்செஸ்டர் என்று கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. ஜவுளித் தொழில், பருத்தித் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை கொண்டது கோவை நகரம். இங்கு கல்வி, வேலைவாய்ப்பிற்காக தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இது மட்டுமில்லாமல் கேரளாவில் உள்ள மக்கள் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தங்கி படித்து வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து கேரளாவிற்கும் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது ஒற்றை வழி சாலை மட்டுமே உள்ளதால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில், கோவையில் உள்ள பாலக்காடு மெயின் ரோட்டை ஒற்றை வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டமாகும். கோவை - பாலக்காடு சாலையில் உள்ள மரப்பாலம் பகுதியைக் கடந்துதான் கோவை மாநகருக்குள் வர முடியும்.
கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இந்த மரப்பாலம் வழியாகத்தான் வந்தாக வேண்டும்.குறுகிய வழியாக இருப்பதால் எதிரெதிர் திசையில் நீண்ட நேரம் காத்திருந்து மட்டுமே வாகனங்கள் கடந்து செல்ல முடியும்.தொடர்ந்து வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே மரப்பாலம் ரயில்வே பாலம் அருகே பாலக்காடு பிரதான சாலையை ரூ.102.5 கோடி செலவில் அகலப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி கோரி கோயம்புத்தூர் கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மாநில அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தவும், பாதையை 800 மீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சாலை 16.2 மீ அகலமாக இருக்க திட்டமிடப்பட்டுள்ளது, இருபுறமும் 7.5 மீ சென்டர் மீடியனுக்கு 1.2 மீ ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அருகிலுள்ள மரப்பாலம் ரயில் பாலத்தின் இருபுறமும் 5.5 மீ அகல சாலை மழைநீர் வடிகால் அமைப்புடன் உருவாக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்த உடன் பணியை தொடங்கி திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
இந்த நிலையில் சேலம்- கொச்சின், மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ்பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால் 16.05.2025 முதல் கோவையிலிருந்து பாலக்காடு மற்றும் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மரப்பாலம் சாலை கீழ் பாலம் வழியாக செல்ல இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் எந்த பகுதியில் செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.