மருத்துவமனையில் இருந்தும் அடித்து ஆடும் ஸ்டாலின்! நிதியை வழங்குங்க! பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

Published : Jul 27, 2025, 09:34 AM IST
modi stalin

சுருக்கம்

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மிக முக்கியமாக நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி நிதியை விடுவிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tamilnadu CM Stalin Various Demands To PM Modi: பிரதமர் மோடி நேற்று தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

தேசியக் கல்விக் கொள்கை

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு: தமிழ்நாடு அரசால் 2018 ம் ஆண்டு முதல் சமக்ரா சிக்ஷா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொடர்ந்து செயல்திறனை அதிகரித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஒன்றிய அரசு வைத்துள்ளது.

ஆனால், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ மற்றும் கொள்கை அடிப்படைகளில் தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-இன் சில அம்சங்களில், குறிப்பாக மும்மொழிக் கொள்கை மற்றும் 5+3+3+4 கட்டமைப்பில் பள்ளிக் கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றில் தனது மாற்றுக்கருத்துகளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைப்பில் தற்போது 43.90 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 32,000-க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் உள்ளனர்.

கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்

இந்த அளவிலான மற்றும் முக்கியத்துவமிக்க திட்டத்திற்கு தேவையான நிதிகளை வழங்காமல் இருப்பது, இலட்சக்கணக்கான மாணவ மாணவியரின் எதிர்காலத்தை பாதித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியப் பிரதமர் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான நிலுவையிலுள்ள ரூபாய் 2,151.59 கோடி ஒன்றிய அரசின் பங்கை உடனடியாக விடுவிக்கவும். 2025-26ஆம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிடவும், PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் நிதியினை விடுவிக்கவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

பத்தாண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள பல முக்கியமான இரயில் பாதை திட்டங்களான திண்டிவனம்- செஞ்சி -திருவண்ணாமலை (70 கி.மீ) இரயில் பாதை, ஈரோடு-பழனி (91 கி.மீ) இரயில் பாதை, அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி (60 கி.மீ) இரயில் பாதை, அத்திப்பட்டு புத்தூர் (88 கி.மீ.) இரயில் பாதை, மகாபலிபுரம் வழியாக சென்னை-கடலூர் (180 கி.மீ) இரயில் பாதை ஆகிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கேட்டும்,

திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இரட்டை பாதை

87 கிமீ நீள திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இரட்டை பாதை துரிதப்படுத்திடவும், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, ஓசூர் புதிய பாதைக்கு ஒப்புதல் அளித்திடவும், கோயம்புத்தூர்-பல்லடம்-கரூர், கோயம்புத்தூர்- கோபிசெட்டிபாளையம் பவானி-சேலம், மதுரை- மேலூர்-துவரங்குறிச்சி- விராலிமலை- இனாம்குளத்தூர் மற்றும் மதுரை நகரைச் சுற்றி புறநகர் ரயில் ஆகிய திட்டங்களுக்கு வழித்தட ஆய்வு / விரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் கோரியும்;

அதிக புறநகர் ரயில் சேவை

சென்னை பெருநகரப் பகுதியில் புறநகர் இரயில் சேவைகளை உச்ச நேரங்களில் இயக்க இடைவெளி நேரத்தை குறைத்திடவும், குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத மின்சார இரயில் பெட்டிகளை (EMU) கூடுதலாக ஒதுக்கீடு செய்திடவும், முக்கிய புறநகர் வழித்தடமான தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையேயான 4-வது வழித்தடத்தை அனுமதித்து ஸ்ரீபெரும்புதூர் இரயில் பாதை திட்டத்தை -செயல்படுத்திடவும், ஆவடி விரைவாக செயல்படுத்திடவும், விரைவான ஒப்புதல்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள்

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி, கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டம் 34.8 கி.மீ.க்கு ரூ.10,740.49 கோடியிலும் மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டம் கி.மீ.க்கு ரூ.11,368.35 கோடியிலும் கட்டி முடிப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது. மெட்ரோ இரயில் கொள்கை-2017 இன்படி, ஒன்றிய அரசும் மற்றும் தமிழ்நாடு அரசும், 50:50 சம பங்களிப்பு அடிப்படையில், இரு திட்டங்களையும் இணைந்து செயல்படுத்துவதற்கான, ஒப்புதலையும் நிதியுதவியையும், விரைந்து வழங்கிட, ஆவன செய்யுமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மீனவர்கள் பிரச்சனை

சமீப காலமாக, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த தொடர்ச்சியான கைதுகள் மாநிலத்தில் உள்ள ஏழை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்து வருகிறது. இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ப‌லமுறை கடிதங்களை எழுதியுள்ளார்.

கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்

தூதரக நடவடிக்கைகள் மூலம் பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இதில் தனது நேரடி கவனத்தை செலுத்தும்படி மாண்புமிகு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விரைவில் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலம் உருக்காலை

1971-1975 காலகட்டத்தில், சேலம் உருக்காலை அமைப்பதற்காக 3973.08 ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு அரசு வழங்கியது. இதில் 1503.44 ஏக்கர் நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சேலம் உருக்காலையில் உள்ள பயன்படுத்தப்படாத நிலத்தைப் பயன்படுத்தி பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலையின் கீழ் சேலத்தில் பாதுகாப்பு தொழில் தொகுப்பினை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளது.

மாண்புமிகு பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சேலம் உருக்காலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை, பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறுவுவதற்கு ஏதுவாக திரும்ப வழங்க ஆவன செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்