
Chief Minister Stalin letter to the Prime Minister Modi : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனைகள் செய்து, மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அரசு பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபடியே "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் முன்னேற்றம் குறித்து காணொலி காட்சி வாயிலாக கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார்.
இன்று இரவு 7:50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும்ப பிரதமர் மோடி, 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அடுத்தாக வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 285 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு கையாளுதல் முனையத்தை திறந்து வைக்கிறார். மொத்தம் 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், தொடங்கி வைக்கவும் உள்ளார். 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரயில் மற்றும் சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
நாளை திருச்சிராப்பள்ளி அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாட்டமான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். வாரணாசியிலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரைப் பயன்படுத்தி பிரகதீஸ்வரர் கோவிலில் மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி நாளை மதியம் விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இதனையடுத்து தமிழக அரசின் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலாளர் முருகானந்தம், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதிகள், மெட்ரோ ரயில் திட்டம் நிதி ஒதுக்கீடு செய்யக்கோரியும், நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ளார்.