செந்தில் பாலாஜியை சொன்னதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டாங்க! ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்!

Published : Jul 26, 2025, 03:51 PM IST
O. Panneerselvam

சுருக்கம்

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மணல் கொள்ளையையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கண்டித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும், கொலைகாரர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட விரோதச் செயல்களின் புகலிடமாக தமிழ்நாடு

இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுக ஆட்சி என்றாலே மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என பல சட்ட விரோதச் செயல்கள் தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. அதுவும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திராவிட மாடல் திமுக ஆட்சியில் சட்ட விரோதச் செயல்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே ஆற்றுக்குள் சென்று மணலை அள்ளிச் செல்லலாம், எந்த அதிகாரியும் தடுக்கமாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சொன்னதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த மணல் கொள்ளைதான் தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றக் கொண்டிருக்கிறது.

பொக்லைன் இயந்திரம் மூலம் கிராவல் மண்

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கடற்கரையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுக்கப்படுவது, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூர் அடுத்த முடியனூர் தென் பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பல மீட்டர் ஆழத்திற்கு மணல் தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவது, மணலூர்பேட்டை அடுத்த சித்தப்பட்டினம் ஏரியில் பட்டப் பகலில் பொக்லைன் இயந்திரம் மூலம் கிராவல் மண் தோண்டப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

இருவர் மணல் கடத்தல் தொடர்பாக வெட்டி கொலை

அந்த வகையில், கரூர் மாவட்டம், வாங்கலில், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் தனியருக்கச் சொந்தமான இடத்தில் மணல் அள்ளப்பட்டதாகவும், இதனை அறிந்து கொண்ட அந்த இடத்தின் உரிமையாளர் அங்கு சென்று அதை தட்டிக் கேட்டதாகவும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும், நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மணல் கடத்தல்காரர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் ஒரு வாரத்திற்கு முன்பு செய்தி வந்தது. தற்போது, புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில், காமராஜர் பகுதியைச் சேர்ந்த இருவர் மணல் கடத்தல் தொடர்பாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. தமிழ்நாட்டில் மணல் கடத்தல் நடைபெறுவதும், இதன்மூலம் படுகொலைகள் நடப்பதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

முக்கியமான அரசியல் புள்ளிகள் மணல் கொள்ளையில் ஈடுபடுவது

மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை திமுக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்காமல், அவர்கள்மீது மென்மையான போக்கினை கடைபிடித்து வருவதுதான் இதுபோன்ற கொலைகள் அதிகரிக்க வழிவகுக்குகிறது. திமுக அரசு இதுபோன்ற மென்மையான போக்கினை கடைபிடிப்பதற்குக் காரணம், ஆளும் கட்சியைச் சார்ந்த முக்கியமான அரசியல் புள்ளிகள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதுதான் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கரூர் அமராவதி மற்றும் காவேரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய புகாரில் திமுக பொதுக் குழு உறுப்பினருக்கு சொந்தமான 26 லாரிகள் கடந்த ஜூன் மாதம் பறிமுதல் செய்யப்பட்டது இதற்கு ஓர் உதாரணம்.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி

மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதன் மூலம் நிலத்தடி நீர் குறைந்து, பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்பட வேண்டிய அவல நிலையும் உருவாகும். தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு. முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும், கொலைகாரர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்