வடகிழக்கு பருவமழை… முன்னேற்பாடுகள் குறித்து ஸ்டாலின் அவசர ஆலோசனை!!

By Narendran SFirst Published Nov 6, 2021, 6:48 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது, இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், வங்க கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாகவுள்ளது. இதனால்,வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதனால்,வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வருகின்றன. மேலும் சில மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு தரைபாலமும் நீரில் மூழ்கியுள்ளது. நீர் நிலைகள் ஒரு பக்கம் வேகமாக நிரம்பினாலும், விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே வடகிழக்குப் பருவமழைக் காலமாக இருப்பதால் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் உபகரணங்களுடன் முழு வீச்சில் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது.  

மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்கும் நபர்களைப் பாதுகாப்பாக மீட்க ரப்பர் படகுகள் மற்றும் மோட்டர் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரினை வெளியேற்ற நீர் இறைக்கும் பம்புகள் மற்றும் மீட்புப் பணிக்கான கயிறுகள், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகளும் தயார் நிலையில் உள்ளதாக மீட்புபடையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைமைச்செயலாளர் உள்பட உயர் அதிகாரிகள், 13 மாவட்ட ஆட்சியர்கள், வருவாய், மருத்துவம் , வேளாண், மின்சாரம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளின் மற்றும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக  கலந்துகொண்டனர். இதில் மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பயமே இன்னும் விலகாத நிலையில் டெங்கு பாதிப்பும் பதிவாகி வருவது அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

click me!