கட்டிடம் இடிந்து விழுந்து பலியான சிறார்களுக்கு ரூ.2 லட்சம்... நிவாரணம் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Jan 27, 2022, 5:33 PM IST
Highlights

கடலூரில் கட்டிட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கடலூரில் கட்டிட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் அருகே எஸ். புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் கட்டிடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது. இன்று  இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார் புவனேஸ்வரன் மற்றும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வீரசேகர், சுதீஷ்குமார் 2 பேரும் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த கட்டிடம் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பாகும். யாரும் வசிக்காத நிலையில் கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது இடிந்து விழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து பராமரிப்பு அற்ற பள்ளிக்கட்டிடங்களை இடிக்க அரசு உத்தரவிட்டது. இதே போல பராமரிப்பு இல்லாமல் பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் கடலூரில் கட்டிட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிப்பில், கடலூர் மாவட்டம் இராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சதிஷ் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்திரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!