எங்கள் ஆட்சியில் உங்கள் முதல்விழா.. பிரதமருக்கு நன்றி..முதலமைச்சரின் நெகிழ்ச்சி உரையில் பூரித்த மோடி..

By Thanalakshmi VFirst Published Jan 12, 2022, 7:10 PM IST
Highlights

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் கலந்துக்கொள்ளும் முதல் அரசு விழா என்பதால் பிரதமருக்கு நன்றி.அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பது கருணாநிதியின் கனவு. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பேசினார்.மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று காணொலி மூலம் விழாவில் பங்கேற்ற பிரதமரிடம் வலியுறுத்தினார்.நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் அவர் கூறினார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம் என 2006 தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.அந்த கனவு இன்று நினைவாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்று பேசினார்.

இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ். இடங்களையும் - மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு - மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கும் - குறிப்பாக, இந்தியப் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி கூறக் கூடிய அதேநேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மாநில அரசிற்குத் தங்களது அரசு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டுமென்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி, மக்களுக்குப் பயன் தரும் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், தமிழ்நாடு அரசு, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு, நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது. கண்ணொளித் திட்டம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 என தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பலவற்றை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இவ்வாறு புதுமையான திட்டங்களைத் தீட்டி, சிறப்புறச் செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வரும் இச்சூழலில், தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும் அரசுத் துறையிலும் சிறப்பாக சேவை செய்வதற்கு தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படையாகும். எங்களது கொள்கை, இந்த வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற - ஏழை - எளிய மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே. தமிழ்நாட்டின் மருத்துவத்துறையின் வெற்றியும் இந்தக் கொள்கையின் விளைவே. இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே மனிதவள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றித் தர வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக அமைச்சர்கள், தமிழக சுகாதாரத்துறை செயலர், தலைமை செயலர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

click me!