அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரேசன் கடையில் பாடம் நடத்தும் கொடுமை; பழுதடைந்த கட்டிடத்தால் மாணவர்கள் அவதி...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 28, 2018, 7:02 AM IST
Highlights

கோயம்புத்தூரில் அரசுப் பள்ளிக்கூடக் கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் இங்குப் படிக்கும் மாணவர்களுக்கு ரேசன் கடை இருக்கும் கட்டிடத்தில் பாடம் நடத்தப்படுகிறது. ரேசன் கடை செயல்படும் சமயங்களில் மாணவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர் ஆசிரியர்கள்.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் அரசுப் பள்ளிக்கூடக் கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் இங்குப் படிக்கும் மாணவர்களுக்கு ரேசன் கடை இருக்கும் கட்டிடத்தில் பாடம் நடத்தப்படுகிறது. ரேசன் கடை செயல்படும் சமயங்களில் மாணவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர் ஆசிரியர்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, கருமாண்டகௌண்டனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் அம்மாபட்டி காலனி, கருமாண்டகௌண்டனூரை போன்ற பகுதிகளைச் சேர்ந்த 22 மாணவர்கள் படிக்கின்றனர். 

இந்தப் பள்ளிக்கு கடந்த 1988–ஆம் ஆண்டு புதிதாக கட்டிடம் ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது. இப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியர், ஒரு உதவியாசிரியர் பணிபுரிகின்றனர். இந்தப் பள்ளியில் 75% மலைவாழ் மக்களின் குழந்தைகள்தான் படிக்கின்றனர் என்பது கூடுதல் தகவல். 

இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இவ்வளவு பழைய கட்டிடம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த சில நாள்களாக பொழிந்துவரும் மழையால் இக்கட்டிடத்தின் ஒரு பகுதி லேசாக கீழே இறங்கிவிட்டது. 

எப்போது வேண்டுமானாலும் இக்கட்டிடம் சரிந்து விழலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இங்குப் படிக்கும் மாணவர்களை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தற்காலிகமாக இப்பகுதியில் இருக்கும் ரே‌சன் கடைக்கு மாற்றினர். அங்குதான் தற்போது இவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 

பள்ளிக்கூட கட்டிடத்திற்கு பூட்டுபோடப்பட்டுவிட்டது. கரும்பலகை உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லாமல் ரேசன் கடையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ரே‌சன் கடை செயல்படும் சமயங்களில் மாணவர்களை அருகிலுள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர் என்பதுதான் இங்கு கொடுமையே. 

தற்போது மழை பொழிந்துவருவதால் மாணவர்கள் அடிக்கடி இடமாற்றப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.  

எனவே, 'இப்பள்ளிக்கு நிரந்தரமாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்' என்று இப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!