நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், கொளுத்தும் வெயிலை சமாளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லவுள்ளார். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு மாத காலத்திற்கு மேல் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தநிலையில் தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், நல திட்டங்களை செயல்படுத்தவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் அரசியல் தலைவர்கள்
இதே போல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரசு திட்டங்கள் மற்றும் அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அமெரிக்கா, லண்டன் என வெளிநாடு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. குறிப்பாக இந்தியாவிற்கு எதிராக மாலத்தீவு கருத்து தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் மாலத்தீவு பயணம் சர்ச்சைஐ ஏற்படுத்தியது. இந்தநிலையில் முதல்வர் மாலத்தீவு செல்லவில்லை என திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் கொடைக்கானல் பயணம்
தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா பகுதிக்கு வரவிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகையை முன்னிட்டு கொடைக்கானல் பகுதிகளில் 29.04.2024 அன்று முதல் 04.05.2024 வரை டிரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறப்பதை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்.,இ.கா.ப., அவர்கள் அறிவித்துள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது.
மாலத்தீவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் செல்லவில்லை.. தவறான தகவல்.. மறுப்பு தெரிவித்து விளக்கம்..!