
தமிழக அரசு தொழில் துறையில் முன்னேற்றம் அடைவதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் 192 நாடுகள் பங்கேற்கும் துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக அரங்கம் அமைக்கப்படுகிறது. கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக நேற்று துபாய் சென்றடைந்தார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் பூங்கொத்துகள், சால்வைகள் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். துபாயில் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, துபாய்க்கான இந்திய தூதர் ஜெனரல் வரவேற்றார்.
மேலும் அந்நாட்டு அரசின் மரியாதையுடன் அரசு அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். இதில், தொழில்துறையில் முன்னணி வகித்து வரும் தமிழர்களும் கலந்துக்கொண்டு, முதல்வரை சிறப்பாக வரவேற்றனர்.
அங்கு சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை முடித்துக் கொண்டு வரும் 28 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறார்.
ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டிற்குமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதுமே இந்த பயணத்தின் நோக்கம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துபாயில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பொருளாதாரம், வர்த்தகத்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அமீரக அமைச்சர்கள் தானி பின் அகமது அல் ஸீயோதி, அப்துல்லா பின் டூக் அல் மர்ரி ஆகியோருடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தற்போதைக்கு வர்த்தக ரீதியாக முதலீடு செய்ய பல்வேறு நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஆசிய நாடுகளான இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. இந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் பயணம் செய்திருப்பது, எதிர்பார்த்த பொருளாதார ரீதியான நல்ல பலனை அளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"