
கோவையில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போதைய முல்வர் கருணாநிதி கோவை மாவட்டம் காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து 2021ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் செம்மொழி பூங்கா திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.5 கோடி மதிப்பலி் செம்மொழி பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த பணிகள் கடந்த 2023ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். முதல்கட்ட பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டுக்காக இன்று தொடங்கி வைத்தார்.
செம்மொழி பூங்கா திறப்பை முன்னிட்டு காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் 11.15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை வந்த முதல்வருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து 11.45 மணிக்கு காந்திபுரம் வந்த நிலையில் செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், ஆரோக்கியம், புதிர்தோட்டம், நீர்வனம், பூங்சோலை, பாளை வனம், மலைக்குன்று உள்ளட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிட்டார்.