
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் அருகே நடந்த கோர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற வைத்துள்ளது. திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அதிவேகமாக சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பயணம் செய்த ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 56 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்க்கப்பட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இபிஎஸ் இரங்கல்
இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ''தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் துரைச்சாமியாபுரம் காமராஜபுரம் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நெற்கு நேர் மோதியதில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 45 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண உடல்நலம் பெற வேண்டுவதோடு, அவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.