
தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே. சுதர்சனம் வடமாநில கொள்ளையர்களால் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள பெரியபாளையத்தில் சுதர்சனம் தனது குடும்பத்திருடன் தூங்கியபோது பவாரியா கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
பின்பு சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கொள்ளையர்கள் அவரது மனைவி மற்றும் மகள்களை கொள்ளையர்கள் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுபோன்ற தொடர் கொள்ளைகளால் இந்தியாவையே கலங்கடித்த பவாரியா கொள்ளையர்களை பிடிக்க அப்போதைய காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் தலைமையிலான காவல்துறை வடமாநிலங்கள் சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
பல்வேறு இன்னல்களை கடந்து சுதர்சனைத்தை கொலை செய்த பவாரியா கும்பலின் தலைவர் ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜகதீஸ்வரா உள்ளிட்ட 9 பேரை 2005இல் கைது செய்தனர். இந்த கொள்ளையர்களில் 2 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். மேலும் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட இருவர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
குற்றவாளிகள் என தீர்ப்பு
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் மிகவும் காலதாமதமாக நடந்து வந்தது. இதனால் விசாரணையை விரைவுப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை முடிவடைந்த நிலையில், பவாரியா கொள்ளையர்கள் ராகேஷ், அசோக், ஜெகதீஷ் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.
ஆயுள் தண்டனை
இந்த நிலையில், 3 பேருக்கும் தண்டனை விவரங்களை இன்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது ராகேஷ், அசோக் மற்றும் ஜெகதீஷ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் உத்தரவிட்டுள்ளார்.அதே வேளையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த ஜெயில்தார் சிங் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.