
இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 'ஐ.என்.எஸ் மாஹே' (INS Mahe) போர்க்கப்பல், திங்கட்கிழமை கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. இது, 'மாஹே' வகுப்பில் முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ஆகும்.
மும்பையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான கப்பல் இணைப்பு விழாவில், இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தால் (Cochin Shipyard Limited) வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஐ.என்.எஸ். மாஹே, இந்தியாவின் 'தற்சார்பு இந்தியா' (Aatmanirbhar Bharat) இலக்கின் முக்கியச் சின்னமாகக் கருதப்படுகிறது.
இந்தக் கப்பலின் கட்டுமானத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாஹே வகுப்பில் மொத்தம் எட்டு போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இக்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களைக் வேட்டையாடுவது (Hunt Submarines), கடலோர ரோந்துப் பணிகளை மேற்கொள்வது மற்றும் இந்தியாவின் முக்கியமான கடல்சார் வழித்தடங்களைப் பாதுகாப்பது போன்ற முக்கியப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாஹே கப்பலானது, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ராக்கெட்டுகள், டார்ப்பிடோக்கள் (Torpedoes) மற்றும் மேம்பட்ட சென்சார்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களைக் கொண்டுள்ளது.
இது, ஆழம் குறைந்த கடலோரப் பகுதிகளில் நீண்ட நேரம் நிலைநின்று நீருக்கடியில் உள்ள அச்சுறுத்தல்களைத் துல்லியமாகக் கண்டறிந்து நடுநிலைப்படுத்தும் திறனைக் கொண்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மலபார் கடற்கரைப் பகுதியான 'மாஹே'யின் பெயரைக் கொண்டுள்ள இந்தக் கப்பலின் சின்னத்தில் 'உருமி' வாள் இடம்பெற்றுள்ளது. இது இந்தக் கப்பலின் வேகம், துல்லியம் மற்றும் அபார வலிமையைக் குறிக்கிறது.
இது 'மௌன வேட்டைக்காரர்கள்' (Silent Hunters) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வேகம் மற்றும் ரகசியத் தன்மையைக் குறிக்கும் வகையில், சிறுத்தை (Cheetah) இதன் சின்னமாக உள்ளது.
விழாவின் முடிவில், ஜெனரல் திவேதி, இந்தக் கப்பலின் இணைப்புப் பணியில் முக்கியப் பங்காற்றிய கடற்படை அதிகாரிகளுக்கு இராணுவத் தலைமைத் தளபதியின் 'பாராட்டுப் பதக்கங்களை' (COAS Commendation) வழங்கினார்.