
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) அரசு அலட்சியம் காட்டுவதாலேயே விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் என்னென்ன என்றுகூட முதலமைச்சருக்குத் தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திங்கட்கிழமை (நவம்பர் 24) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
"நான் எப்போதும் விவசாயிதான். சட்டமன்ற உறுப்பினரானது முதல் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறேன். விவசாயத்தைப் பற்றி எனக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். விவசாயிகளுக்கு என்றும் ஆதரவாகச் செயல்பட்டது அ.தி.மு.க. அரசுதான். ஆனால், தி.மு.க. அரசு விவசாயிகள் நலனில் போதிய அக்கறை காட்டுவதில்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'பச்சைத் துண்டு அணிந்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி' என்று விமர்சிக்கிறார். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் என்னென்ன என்றுகூட முதல்வருக்குத் தெரியவில்லை. காவிரி படுகை மாவட்டங்களைப் பாலைவனமாக்க முயற்சித்தவர் மு.க. ஸ்டாலின்."
"தமிழகத்திலுள்ள விவசாயிகளின் கண்ணீரை அறியாமல் முதலமைச்சர் திரைப்படம் பார்க்கச் செல்கிறார். நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை (கூட) போராடிக் கேட்க வேண்டியுள்ளது. அதைக்கூட எதிர்க்கட்சி தான் செய்கிறது.
முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்டுப் பயிர்களை அறுவடை செய்திருந்தால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியிருக்காது.
நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அளவுக்கு லாரிகள் இல்லை, எடைபோடும் நபர்கள் நியமிக்கப்படவில்லை. விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்திருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்."
"வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை தி.மு.க. அரசு எதிர்க்கிறது. இறந்தவர்களை வைத்து வாக்குகளைப் பெற தி.மு.க. முயற்சிக்கிறது. அவர்கள்தான் ஆளும் கட்சி. சிறப்புத் தீவிரத் திருத்தம் கொண்டு வருவதில் அவர்களுக்கு என்ன பிரச்னை?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.