SIR படிவத்தை சமர்ப்பிக்க கூடுதல் அவசாகம் கிடையாது.. தலைமை தேர்தல் அதிகாரி திட்டவட்டம்!

Published : Nov 24, 2025, 04:38 PM IST
SIR voter list revision forms Tamilnadu

சுருக்கம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் டிசம்பர் 4ம் தேதிக்குள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். படிவங்களை வாக்காளர்கள் விரைந்து பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திங்கட்கிழமை (நவம்பர் 24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:

50% படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன

தமிழகம் முழுவதும் சுமார் 6.16 கோடி பேருக்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களுக்கு அளிக்கப்பட்ட இந்தக் கணக்கீட்டுப் படிவங்களில் இதுவரை சுமார் 50 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

மேலும், சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. தற்போதைய நடைமுறையில், எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குக் கூடுதல் கால அவகாசம் கொடுக்க இதுவரை வாய்ப்பு இல்லை. பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

படிவங்கள் நிராகரிப்பு மற்றும் நீக்கம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப் படிவங்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இருந்தால், எந்தப் படிவமும் நிராகரிக்கப்படாது.

ஒருவேளை வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டால், அதற்குரிய சரியான காரணம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்படும். பெயர் இடம்பெறாவிட்டால் அதற்கான காரணமும் தெரிவிக்கப்பட வேண்டும்.

பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பம்

எஸ்.ஐ.ஆர் ஆன்லைன் சர்வர் சரியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சுமார் 33,000 தன்னார்வலர்களும் 88,000 பி.எல்.ஓ.க்களும் (சாவடி நிலை அலுவலர்கள்) எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 327 பி.எல்.ஓ.க்கள் தங்கள் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களைப் பெற்றுக்கொள்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. ஒருவர் தவறான ஆவணத்தை அளிப்பாரெனில், அதை பி.எல்.ஓ.க்கள்தான் கண்டறிய முடியும்.

பிற மாநிலத்தவர் விண்ணப்பம்

தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்கள் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதி வரை எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!
காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு.. தமிழகத்தில் தினமும் 5 படுகொ**லை.. ஷாக் கொடுக்கும் அன்புமணி