மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தலைவர்களுக்கு அரசு மரியாதை
நாட்டிற்காக போராடிய தலைவர்கள், தியாகிகள், கலைத்துறையில் சிறந்து வளங்கியர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் தமிழக அரசின் செய்தித்துறை சார்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மறைந்த தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறது. அந்த வகையில் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கிபி 985 ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ராஜராஜசோழனுக்கு முடிசூட்டப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் சதய விழா கொண்டாடப்படுகிறது.1037வது சதய விழாவை முன்னிட்டு, பெரிய கோவில், ராஜராஜ சோழன் சிலை ஆகியவை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ராஜ ராஜ சோழன்- அரசு விழா
இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா.. விழா கோலம் பூண்ட தஞ்சாவூர்..