Chennai Flood: சென்னையில் இதற்கு முன்னர் நடக்காத… ஒரே வாரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….

By manimegalai aFirst Published Nov 11, 2021, 6:53 PM IST
Highlights

தமிழகத்தில் சென்னையில் மட்டும் தற்போது 77 சதவீதம் கூடுதல் மழை பதிவாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

சென்னை: தமிழகத்தில் சென்னையில் மட்டும் தற்போது 77 சதவீதம் கூடுதல் மழை பதிவாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தென்மேற்கு பருவமழையை காட்டிலும் எப்போதும் தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் பருவகாலம் வடகிழக்கு பருவமழைக்காலம்தான். கடந்த மாதம் 25ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் இந்த பருவமழையை யாரும் பெரிதாக கண்டுகொள்ள வில்லை. காரணம் ஆங்காங்கே லேசான பெய்த மழையே காரணம். ஆனால் அதற்கு அடுத்த சில தினங்களில் மழையானது வேகம் எடுக்க தொடங்கியது.

டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கடலூர், சேலம், கோவை, தென்காசி, நெல்லை என மழை பிச்சு உதறியது. மிதமான மழை, பலத்த மழை, கனமழை, அதி கனமழை என நாள்தோறும் வானிலை அறிவிப்புகள் மக்களை உதற வைத்தன.

அதிலும் தீபாவளிக்கு பிறகு நிலைமை மெல்ல, மெல்ல தலைகீழானது. வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களை உண்டு இல்லை என்று வெளுத்து வாங்கியது.

அதுவரை சென்னையில் வானம் லேசாக வானமூட்டத்துடன் காணப்படும், தரைக்காற்று சற்று அதிகமாக வீசக்கூடும் என்ற அறிவிப்புகள் தலைகீழாக மாறின. சனிக்கிழமை ஆரம்பித்த மழை தொடர்ந்து 4 நாட்களுக்கு மக்களின் வாழ்க்கையை நாசமாக்கியது.

சென்னையை புரட்டி போடும் அளவுக்கு மழை போட்டு தாக்கியது. சாலைகளில் வெள்ளம், வீடுகளில் வெள்ளம், எங்கும் மழைநீர், மக்கள் தவிப்பு, நிவாரண முகாம்கள் திறப்பு என சென்னையே அதகளமானது. அதிலும் கடந்த 2 நாட்களாக சென்னையில் விடாமல் மழை பெய்த வண்ணம் இருக்கிறது.

சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 3ல் 2 பங்கு ஏரிகள் முழுமையாக நிரம்பி காட்சி அளித்தன. கிட்டத்தட்ட 24 மணி நேரத்தையும் கடந்து பொழிந்து தள்ளிய மழையால் சென்னையில் மீண்டும் படகு மூலம் மீட்பு பணிகள் நடந்தேறும் காட்சிகள் அரங்கேறின.

மதுராந்தகம், செம்பரம்பாக்கம், புழல் என அனைத்து ஏரிகளும் தளும்பிய நிலையில் காணப்பட்டது. மக்களையும், குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்து தலைநகரம் தண்ணீர்தேசமானது.

கடந்த ஆண்டுகளை காட்டிலும் இப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது ஒட்டு மொத்தமாக 54 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த மழை அளவு மக்களையே மிரள வைத்துள்ளது.

கிட்டத்தட்ட இயல்பாக பொழிய வேண்டிய மழையானது, அதை காட்டிலும் தீவிரமாக அதாவது 77 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நகரம் தத்தளிக்க இந்த அதிக மழை பொழிவே காரணம் என்று கூறப்படுகிறது.

மழையின் அளவு எப்படி இருந்தால் என்ன..? ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளே மக்களின் வாழ்க்கை நிலைமையை தீர்மானிக்கின்றன, சரியான திட்டமிடலும், செயல்பாடுகளும் இருந்தால் 77 சதவீதம் என்ன… அதற்கு கூடுதலாக மழை பெய்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்…!

மழைநீர் வடிகால் கட்டமைப்புகளில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த மழை சொல்லி இருக்கும் சேதி என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.

click me!