தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இரவு, பகலாக விடாமலை கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஆனாலும், இயல்பை விட இதுவரை குறைவான அளவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும், அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 28.11.2023 முதல் 02.12.2023 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், அடுத்த 3 மணி நேரத்துக்கு ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்க கடல் பகுதிகளில் 27.11.2023 (இன்று) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28,11.2023 அன்று தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.11.2023 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 30.11.2023 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.