அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும்… எச்சரிக்கும் வானிலை மையம்!!

By Narendran SFirst Published Nov 10, 2021, 2:30 PM IST
Highlights

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று நாளையும் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

#chennaiflood தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வட தமிழக கடற்கரையையொட்டி நிலவக்கூடும். பின்னர் தொடர்ந்து  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுவை கடற்கரை பகுதியில் காரைக்கால் - ஸ்ரீஹறிகோட்டா இடையே கடலூருக்கு அருகே நாளை மாலை கரையை கடக்கும். இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை காலை முதல் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகனமழை ஐந்து இடங்களிலும் மிக கனமழை 21 இடங்களிலும் கனமழை 40 இடங்களிலும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம், திருப்பூண்டி தலா 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழை குறுத்த முன்னறிவிப்பு பொறுத்தவரையில் 10 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகன மழையும் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் கோயம்பத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பிற இடங்களில் மிதமான மழையும்  பெய்யக்கூடும். 11 ஆம் தேதி திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, ஈரோடு,கிருஷ்ணகிரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்பத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் ஒருசில பகுதிகளில் அதிகனமழையும் பெய்யக்கூடும். 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல், தமிழக கடற்கரை பகுதிகள்,  தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 – 55 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.  கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் 38 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 25 செ.மீ. இது இயல்பை விட 51 சதவீதம் அதிகம். சென்னையை பொறுத்தவரை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 61 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவு 41 செ.மீ. இது இயல்பை விட 50 சதவீதம் அதிகம். என்று தெரிவித்துள்ளார்.

click me!