இனி பள பளனு மின்ன போகும் சென்னை சாலைகள்… நிதி ஒதுக்கீடு செய்தது கார்ப்பரேஷன்!!

By Narendran SFirst Published Nov 3, 2021, 3:15 PM IST
Highlights

மழைக் காலத்தில் சாலையில் உள்ள வெட்டுகள், குழிகளில் தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிண்டி சின்னமலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ராமாபுரத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்ற ஐ.டி ஊழியர் விபத்தில் பலியானது தெரிய வந்துள்ளது. வேலைக்கு சென்று கொண்டிருந்த முகமது யூனுஸ் சின்னமலை பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, தனியார் விடுதிக்கு எதிரே சாலையில் உள்ள மழை நீர் தேங்கி நின்ற பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறியுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்துக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதால், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது மாநகரப் பேருந்து இடையே சிக்கி பேருந்தின் பின் சக்கரம் தலையில் மீது ஏறிச்சென்றதால் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த காட்சியானது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனை அடிப்படையாக வைத்து பேருந்து ஓட்டுநர் தேவராஜை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறைக்கு விளக்கம் கேட்டு கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தனியார் டெலிகாம் நிறுவனம் கடந்த மாதம் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை பள்ளம் தோண்டி கேபிள் பதிக்க அனுமதி வாங்கிவிட்டு அந்த அனுமதி காலம் முடிந்த பின்பும், சாலையில் பள்ளம் தோண்டியதாகவும், அந்த பள்ளத்தை சரியாக திரும்ப சரிசெய்யவில்லை என தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் ஹரிபாபு என்பவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மழைக் காலத்தில் சாலையில் உள்ள வெட்டுகள், குழிகளில் தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 5500 கி.மீ சாலைகள் உள்ளன என்றும் அதில் 942 உட்புற சாலைகள் மற்றும் தெருக்களில் 30 ஆயிரம் சதுர.மீ பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை குழிகளை சரிசெய்யும் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 10 லட்சம் வீதம் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மண்டல அதிகாரிகள் மேற்பார்வையில உடனடியாக சாலைகளை சீர்செய்யும் பணிகளை முடித்து மாநகராட்சிக்கு அறிக்கை கொடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. சாலை பராமரிப்பு முறையாக மேற்கொள்ளாமல் விபத்துக்கு காரணமாக அமைந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

click me!