நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர அறையில் அடுத்தடுத்து சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து வருவது அரசியல் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 அடுக்கு பாதுகாப்பில் வாக்கு இயந்திரம்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அந்த அந்த தொகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி பொறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி நிர்வாகிகளும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் அடுத்தடுத்து சிசிடிவி கேமரா ஆப் ஆகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் நீலகிரி தொகுதியில் கண்காணிப்பு பணிக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயல் இழந்தது.
கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி, மக்களுடன் செல்பி எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அடுத்தடுத்து ஆப் ஆகும் சிசிடிவி
அடுத்து ஈரோடு தொகுதியில் சிசிடிவி கேமராக்கள் இரவு நேரத்தில் செயலிழந்தது. இது போன்று அடுத்தடுத்து சிசிடிவி கேமராக்கள் இரவு நேரத்தில் ஆப் ஆனது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உரிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த 95 கேமராக்கள் திடீரென பழுது ஏற்பட்டது. மீண்டும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி யு. எஸ். பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள.
இடி, மின்னலே காரணம்
நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் பலத்த இடி, மின்னலோடு மழை பெய்தது. அப்போது தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் 95 கேமராக்கள் பழுது ஏற்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்பை சரி செய்ய அறிவுறுத்தினார். இதனையடுத்து சிசிடிவி கேமராக்கள் பழுது சரி செய்யும் பணியானது விரைவாக நடைபெற்றது. பழைய சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொறுத்தப்பட்டது. திடீரென இடி, மின்னல் ஏற்பட்டதால் கேமரா பாதிப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.