எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா, கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களை கவுரவுக்கும் விதமாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
undefined
இந்த நிலையில், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தலைசிறந்த வேளாண் அறிஞரும், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான, தமிழகத்தைச் சேர்ந்த அமரர் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த டாக்டர் சுவாமிநாதன், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் தாக்கத்தைக் கண்டு மனம் வருந்தி, நாட்டு மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். மரபியல், பயிர் வளர்ச்சி, தாவர இனப்பெருக்கம் உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சிகள் செய்து, இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திய பெருமைக்குரியவர்.
இன்று உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்திருக்க, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் முக்கியக் காரணம் என்றால் அது மிகையாகாது. அவருக்கு நமது பாரதப் பிரதமர் மோடி பாரதரத்னா விருது வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானதும், நம் அனைவருக்கும் பெருமையளிப்பதுமாகும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.