தொடரும் தற்கொலைகள்… எமனாக காவு வாங்கும் மத்திய அரசின் நீட் தேர்வு!!

By Narendran SFirst Published Nov 6, 2021, 6:11 PM IST
Highlights

நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் கணேசன்-தனலட்சுமி தம்பதியின் மகன் சுபாஷ் சந்திர போஸ் என்பவர், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் 480 மதிப்பெண் பெற்றதால்தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதால் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த சுபாஷ் சந்திரபோஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து வந்துள்ளார். முதல் முறை நீட்தேர்வில் 158 மதிப்பெண்களும், நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 261 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்த வருடம் மருத்துவ படிப்பை மேற்கொண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சுபாஷ் சந்திரபோஸுக்கு நீட் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்த சுபாஷ், தொடர்ந்து இரண்டு முறையும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால் கடந்த ஒன்றாம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வாயில் நுரைதள்ளிய நிலையில் மகன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சுபாஷ் சந்திர போஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

இதுக்குறித்து சுபாஷின் தந்தை கணேசன் கூறுகையில், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த தன் மகன் நீட் தேர்வு தோல்வியால் தங்களை விட்டு பிரிந்த துயரம் தாங்க முடியாமல் தவிப்பதாக சோகம் தெரிவித்தார். சுபாஷ் சந்திர போஸ், சிறு வயதிலிருந்தே நன்றாக படித்து வந்ததாகவும் தங்கள் மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்றுவதற்காக தங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று படிக்க வைத்ததாகவும்கூறும் கணேசன்,  தற்பொழுது தங்களுக்கு இருந்த சொத்தையும் இழந்து பெற்ற மகனையும் இழந்து தவித்து நிற்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். இனி எவருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று கூறிய அவர், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே, நீட் தேர்வு எழுத பயந்து சேலம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்த நிலையில் சேலத்தில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் தேர்வில் தொல்வி அடைந்தால் மனமுடைவதும், தற்கொலை செய்துக்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. ஒருபுறம் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் மத்திய அரசு அதனை ரத்து செய்யாமல் அடம் பிடிக்கும் நிலையில் மறுபுறம் மாணவ மாணவியர் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வை எழுதி அதில் தோல்வியடைந்தால் மருத்துவராக முடியாது என்று மனமுடைந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். நீட் தேர்வால் நிகழும் அடுத்தடுத்த தற்கொலைகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

click me!