
Disability welfare Tamil Nadu government awards : தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு, குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் பண உதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்க இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை மூலம் அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகளை எளிதாகப் பெற முடியும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மாதாந்திர ஓய்வூதியம் வழங்குகின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம் மூலம் மாதம் 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்பவர்களுக்காக தமிழக அரசு பரிசு வழங்கி ஒவ்வொரு ஆண்டும் பாராட்டி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்து ஆகஸ்ட் 15 அன்று, தமிழ்நாடு முதலமைச்சரால் விருதுகள் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.25,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 25,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்க இருப்பதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த பரிசை பெற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் : 30/06/2025 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 30.6.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.