
Holiday Special Bus : தமிழ்நாட்டில் வார இறுதி மற்றும் பண்டிகைக் கால விடுமுறைகளில் சொந்த ஊர் செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. இந்த நேரங்களில், குறிப்பாக தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ஈத் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது, சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெருநகரங்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு பயணிக்கின்றனர். மேலும் தமிழ்நாட்டில், பலர் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வார இறுதி விடுமுறை நாட்களில் அருகிலுள்ள இடங்களுக்கு பயணிக்க விரும்புகின்றனர். பிரபலமான இடங்களாக உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, மற்றும் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போன்றவை பல இடங்களுக்கு சுற்றுலா செல்வார்கள்.
மேலும் இன்றைய காலகட்டத்தில், பொருளாதார முன்னேற்றமும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளும் இளைஞர்களை வெளியூர்களுக்கு, பெரும்பாலும் பெருநகரங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ இடம்பெயர வைக்கிறது. .கிராமங்களில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதும், நவீன வசதிகளைத் தேடுவதும் இதற்கு முக்கியக் காரணங்களாக அமைகிறது. பெருநகரங்களில் உள்ள தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்றும் சேவைத் துறைகளில் வேலை தேடுவது இயல்பாகிறது.
மேலும், உயர்கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சிகளுக்காகவும் இளைஞர்கள் வெளியூர்களை நோக்கி பயணிக்கின்றனர். இந்த நிலையில் விஷேச நாட்கள் வார இறுதி நாட்களில் கிடைக்கும் விடுமுறை சொந்த உறவினர்களோடு கொண்டாட மக்கள் விருப்பப்படுவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கூட்டமானது நிரம்பி வழிகிறது. பயணிகள் முன்பதிவு செய்யாமல் பேருந்து நிலையத்திற்கு வருவதால் உரிய பேருந்துகள் இல்லாமல் சிரமப்படும் நிலையானது உருவாகிறது. இதனால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வார இறுதி நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக ஏற்கனவே தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. 20/06/2025 (வெள்ளிக்கிழமை) 21/06/2025 (சனிக்கிழமை) 22/06/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 20/06/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 21/06/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 20/06/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 275 பேருந்துகளும், 21/06/2025(சனிக்கிழமை) 320 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 20/06/2025 மற்றும் 21/06/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,192 பயணிகளும் சனிக்கிழமை 2,906 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,310 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.