
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த சில வாரங்களாக திருப்பரங்குன்றம் விவகாரம் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இந்த விகாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தின் மாற்று சக்தி நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக வெற்றி கழகம் தற்போது வரை இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருப்பேன், கும்முனு இருக்க வேண்டிய இடத்தில் கும்முனு இருப்பேன் என்ற வசனம் சினிமாவுக்கு பொருந்தும். அரசியலில் அப்படி இருந்தால் சரிபடாது. தேவையான விசயங்களுக்கு விஜய் வாய் திறந்து பேச வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் கருத்துக்கு பதில் அளித்த தவெக நிர்வாகி அருண் ராஜ், தலைவர் விஜய்யின் சினிமா டயலாக யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ அண்ணாமலைக்கு மிகச் சரியாக பொருந்தும். அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால் அவர் தற்போது இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார். எங்கள் தலைவர் என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும் என அவருக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அருண் ராஜ்ஜின் கருத்தால் ஆவேசமடைந்த அண்ணாமலை காட்டமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த அண்ணாமலை என்கின்ற நாயின் வால் வளைந்து தான் இருக்கும், யாராலும் அதனை நிமிர்த்த முடியாது. ஏனெனில் இது உண்மையைப் பேசும் நாய். ஜால்ரா அடிக்காத நாய். கட்சியில் சேர்ந்ததற்கக ஜால்ரா அடிக்கும் நாய் கிடையாது.
மேலும் இது நன்றிக்கான நாய், மோடிக்கான விஸ்வாசமான நாய். சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிப்பதற்காக அரசுப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவில்லை. நான் ஒரு உன்னதமான கோட்பாட்டிற்காக வந்துள்ளேன். ஜால்ரா அடித்து தான் ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு பதவி எனக்கு தேவையே இல்லை” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.