
தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்புகளை வழங்க உள்ளதாக திமுக அரசு தெரிவித்துள்ளது. ஆட்சியில் நான்கரை ஆண்டுகள் சும்மா இருந்து விட்டு இப்போது தேர்தலுக்காக திமுக அரசு லேப்டாப்புகள் வழங்க உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இபிஎஸ் வெளியிட்டுள்ள பதிவில், ''ஏழை எளிய மாணவர்களுக்கும் அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம், மாண்புமிகு அம்மா அரசின் விலையில்லா மடிக்கணினி திட்டம். அரசுப்பள்ளிகள், அரசுக் கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களின் Career Guide-ஆக, Life Shaping Device-ஆக, கல்விக்கான ஆயுதமாக இருந்த மடிக்கணினியை, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் தொடர்ந்து வழங்கி வந்தது எனது தலைமையிலான அதிமுக அரசு.
இந்த மடிக்கணினிகளால் பயனடைந்த இளைஞர்களை இன்றைய தினம் சந்தித்து, #PricelessScheme_AmmaLaptop தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தினைக் கேட்டு அகமகிழ்ந்தேன். அதே சமயம், தற்போதைய அரசுப்பள்ளி மாணவர்களும், இன்றைய விடியா திமுக ஆட்சியில் லேப்டாப் கிடைக்காமல், விஞ்ஞானக் கல்வி கிடைப்பது தடைபட்டு, தாங்கள் வஞ்சிக்கப்படுவதை, தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
பொம்மை முதல்வரின் தேர்தல் நாடகம்
ஸ்டாலின் மாடல் அரசு, நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல், தற்போது தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்ததும், ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகி விட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர். அரைகுறை ஆயிரம் ரூபாய் போலவே, இதுவும், சம்மந்தமே இல்லாமல், கல்வி ஆண்டின் நடுவில், கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதன் காரணம் என்ன? ஏன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை?
பொம்மை முதல்வரைப் போன்றே பொம்மை லேப்டாப்
இன்றைய AI காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு தகவமைத்துக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. பொம்மை முதல்வரைப் போன்றே பொம்மை லேப்டாப் கொடுத்து மாணவர்களை ஏமாற்றப் பார்க்கிறதா ஸ்டாலின் மாடல் அரசு? Election Eyewash-க்காக லேப்டாப் கொடுப்பது போல Drama நடத்தும் உங்களுக்கும், Education Elevation-க்காக தொடர்ந்து லேப்டாப் கொடுத்த எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது ஸ்டாலின் அவர்களே.
#WhereIsOurLaptop என்று நான் கேட்கவில்லை; உங்களால் நான்கரை ஆண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் கேட்கிறார்கள். உரிய , முறையான பதில் வருமா மு.க. ஸ்டாலின் அவர்களே?'' என்று தெரிவித்துள்ளார்.