
ஈரோட்டில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை அக்கட்சியின் முக்கிய நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டம் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கூட்டத்திற்கு வர கியூ ஆர் கோடு (QR Code) அல்லது பாஸ் (Pass) எதுவும் தேவையில்லை. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நேரடியாக வரலாம்.
காலை 8 மணி முதலே பொதுமக்கள் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வர அனுமதிக்கப்படுவார்கள். பொதுக்கூட்டம் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.
சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் தொண்டர்கள் மற்றும் 25 ஆயிரம் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த மட்டும் மொத்தம் 80 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டுள்ளது. 60 ஏக்கர் கார்களுக்கும், 20 ஏக்கர் இருசக்கர வாகனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் விஜய், அங்கிருந்து கார் மூலம் நேரடியாக விஜயமங்கலம் மைதானத்திற்கு வருகிறார். மைதானத்தில் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட வாகனத்தில் நின்றபடி விஜய் உரையாற்றுவார்.
மைதானத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன், "காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளும் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
கூட்டத்திற்கு வருபவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் ஏதுமில்லை என்று கூறிய செங்கோட்டையன், தாராளமாகக் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது, தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்படும் எனவும் கூறினார்.