
MLA Arul expelled from party : பாமகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ராமதாஸ் ஒரு பிரிவாகவும் அன்புமணி ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகிறார்கள்,. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது. ராமதாஸ் தரப்பு அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பிய நிலையில் அன்புமணி பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். அடுத்ததாக பாமக இளைஞர் அணி தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்ததற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்த மோதோல் தற்போது பாமக இரண்டாக உடையும் அளவிற்கு பிளவை சந்தித்துள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக உள்ளவர்கள் ராமதாசும், ராமதாசுக்கு ஆதரவாக உள்ளவர்களை அன்புமணியும் நீக்கி வருகிறார்கள்.
இதனால் நடுவில் சிக்கிக்கொண்டு பாமகவினர் பரிதவித்து வருகிறார்கள். தனக்கு தான் கட்சியில் செல்வாக்கு என அன்புமணியும், தனக்கு தான் என ராமதாசும் களத்தில் இறங்கு மாவட்ட பொதுக்குழுவை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரு. இரா. அருள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30&இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் திரு. இரா. அருள் அவர்கள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக அன்புமணி அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.