முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Published : Jul 01, 2025, 08:34 PM IST
mk stalin, edappadi palanisamy

சுருக்கம்

திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின்போது இளைஞர் அஜித் குமார் மரணம் குறித்து முதல்வர் தொலைபேசியில் குடும்பத்தினரிடம் பேசியதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வரின் பேச்சில் குற்ற உணர்ச்சி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின்போது இளைஞர் அஜித் குமார் மரணம் அடைந்த சம்பவம் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக குடும்பத்தினருடன் பேசியதை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

"அலட்சியத்தின் உச்சம்! கொலை செய்தது உங்கள் அரசு. 'சாரி' என்பது தான் உங்கள் பதிலா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பொம்மை முதல்வருக்கு என்ன தைரியம்?

இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், "அஜித் குமார் இருந்ததால் தான் அந்தக் குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, 'தைரியமாக இருங்கள்' என்று சொல்வதற்கு இந்த 'பொம்மை' முதல்வருக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்?" என்று காட்டமாகப் பேசினார்.

முதலமைச்சரின் பேச்சில் குற்ற உணர்ச்சி துளியும் இல்லை என்றும், "என்ன பண்ணணுமோ பண்ணிக் கொடுக்கச் சொல்றேன்" என்று கூறுவது, போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா என பழனிசாமி கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், பணத்தைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்க முயன்ற அதே முயற்சிதானா இதுவும் என்றும் அவர் சாடினார்.

 

 

நா கூசாவில்லையா உங்களுக்கு?

"அஜித் குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து, கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகுதான் எஃப்.ஐ.ஆர் பதிவு, கைது எல்லாம் நடக்கிறது. உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித் குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?" என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடினார்.

மேலும், "நடக்கக் கூடாதது நடந்துடுச்சு' என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!" என்றும் குறிப்பிட்டு, "இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய 'போட்டோஷூட்' போன் காலே சாட்சி!" என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
Tamil News Live today 07 January 2026: கல்யாணி என் தங்கச்சி... நாங்க ட்வின்ஸ்; முத்துவிடம் புது குண்டை தூக்கிபோட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்