
தமிழகத்தில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது அஜித்குமார் என்ற இளைஞரின் லாப் அப் மரணம் தான். நொடிக்கு நொடி அதிர்ச்சி தகவல் மற்றும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் அஜித் குமார்(28). நகை திருட்டி சம்பவத்தை அடுத்து சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரை போலீசார் விசாரணையின் போது கடுமையாக தாக்கியதால் உயிரிழந்தார்.
அஜித்குமார் லாக் அப் டெத்
போலீசாரால் அஜித்குமார் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டமும் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக, பாஜக, தவெக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
டிஎஸ்பி சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்
மேலும் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 காயங்கள் இருப்பது உறுதியானது. இதனையடுத்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசு வேலை
உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியை தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது வருத்தத்தை தெரிவித்து அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து இந்த வழக்க சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன ஆணையை, அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர்பொற்கொடி ஆகியோர் இன்று அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரிடம் வழங்கினார். மேலும் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது. அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் வழங்கி உள்ளோம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.