கொடுப்பது ரூ.131, பறிப்பது ரூ.275: திமுகவை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்!- கொதிக்கும் அன்புமணி

Published : Sep 10, 2025, 10:31 AM IST
Anbumani Ramadoss

சுருக்கம்

 ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.150 கையூட்டும், 5 கிலோ நெல்லையும் விவசாயிகள் வழங்க வேண்டியுள்ளதாகவும், இதனால் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்பதே லாபகரமாக உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

Rice procurement corruption : தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் கொள்முதல் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் இம்முறை முன்கூட்டியே குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அறுவடையும் முன்கூட்டியே தொடங்கியதால், வழக்கமாக அக்டோபர் மாதம் 1&ஆம் தேதி தொடங்கும் நெல் கொள்முதல் இம்முறை செப்டம்பர் மாதமே தொடங்கியிருக்கிறது. 2024&ஆம் ஆண்டில் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2405க்கும், சன்ன ரக நெல் ரூ.2450க்கும் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில்,

நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல்

நடப்பாண்டில் ரூ.95 உயர்த்தப்பட்டு, முறையே ரூ.2500, ரூ.2545 வீதம் கொள்முதல் செய்யப் படும் போதிலும், அதனால் உழவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. காரணம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரக்கமே இல்லாமல் உழவர்களிடமிருந்து கட்டாயமாக கையூட்டு பெறப்படுவது தான். நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் 40 கிலோ மூட்டையாக கட்டித் தான் எடை வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ.60 வீதம் கையூட்டு வாங்கும் பணியாளர்கள், மூட்டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்டுகின்றனர். அதனால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.150 வீதம் கையூட்டும், ரூ.125 மதிப்புள்ள 5 கிலோ நெல்லையும் உழவர்கள் வழங்க வேண்டியுள்ளது.

தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு ரூ.2369 விலை வழங்குகிறது. அத்துடன் தமிழக அரசு ரூ.131 மட்டும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு பணியாளர்கள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.275 வீதம் கையூட்டாக வசூலித்துக் கொள்கின்றனர் என்று உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகையை விட இரு மடங்கு ஆகும். இந்தக் கையூட்டை வழங்காமல் உழவர்களால் நெல்லை விற்பனை செய்ய முடியாது. ஈரப்பதம் அதிகமாக உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களைக் காட்டி நெல்லை கொள்முதல் செய்ய பணியாளர்கள் மறுத்து விடுவார்கள். அதனால், கையூட்டு தருவதைத் தவிர உழவர்களுக்கு வேறு வழியே இல்லை.

நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல்களை சகித்துக் கொள்ள முடியாத விவசாயிகளில் பெரும்பகுதியினர் இப்போது நெல்லை தனியார் வணிகர்களிடம் விற்கத் தயாராகி விட்டனர். தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.2500க்கு கொள்முதல் செய்யப்படும் நெல் ரகங்களை தனியார் வணிகர்கள் ரூ.2300க்கும் குறைவாகத் தான் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வசூலிக்கப்படும் கட்டாயக் கையூட்டைக் கழித்து விட்டுப் பார்த்தால், தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்பது தான் லாபமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

திமுக அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடம் கையூட்டு வசூலிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலமுறை நான் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும் கூட நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர்களிடமிருந்து கையூட்டாகப் பெறப்படும் தொகை உயரதிகாரிகள் வரை பகிர்ந்து கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. வறுமையில் வாடும் உழவர்களிடமிருந்து கட்டாயக் கையூட்டுப் பெறுவதை விட பெரும் பாவமும், குற்றமும் இருக்க முடியாது. இதைத் தடுக்காமல் ஊக்குவித்து வரும் திராவிட மாடல் அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்