
விழா ஒன்றில் கலந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான என்.ராம் நிகழ்ச்சியில் பேசுகையில், “சவுக்கு சங்கர் செய்யக்கூடிய அனைத்து செயல்களையும் நான் ஆதரிக்க மாட்டேன். நீங்கள் வேண்டுமானால் ஆதரித்துக் கொள்ளுங்கள் நான் ஆதரிக்க மாட்டேன் என்று கூற, அவருடன் மேடையில் அமர்ந்திருந்த நக்கீரன் கோபால் உட்பட பல மூத்த பத்திரிகையாளர்களும் நாங்களும் ஆதரிக்க மாட்டோம் என்று ஒருசேரக் கூறினர்”.
தொடர்ந்து அவர் பேசுகையில், “எனக்கு ஆளுநரை நன்கு தெரியும், அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவேன். அப்படி ஒருநாள் நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது நீங்கள் நக்கீரன் கோபாலை ஒருநாள் ராஜ்பவனுக்கு அழைத்து வாருங்கள். அவருடன் சமரசம் செய்து கொள்ளலாம். நான் அவரை விமர்சிக்கப் போவதில்லை. டீ குடிக்கும் நேரத்தில் அவருடன் பேசி சமரசம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் நக்கீரன் கோபாலை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் நான் எதற்காக அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்பதை அறிந்து கொண்ட கோபால் எனது அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். தொடர்ந்து அவரை 10 நாட்கள் தொடர்புகொள்ள முடியவில்லை. காவல் துறை தேடியோ, நீதிமன்ற வாரண்ட்டுக்கு பயந்தோ அவர் தலைமறைவாகவில்லை. முதல் முறையாக ஒரு டீக்கு பயந்து 10 நாட்கள் தலைமறைவாக இருந்தார் என்று தெரிவித்தார்.
என்.ராம் பேசிய வீடீயோ பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அதனை டேக் செய்துள்ள மற்றொரு மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சுமந்த் ராமன் தனது எக்ஸ் பக்கத்தில் “சவுக்கு சங்கர் பத்திரிகையாளர் இல்லை என்றால் நக்கீரன் கோபால்..?
என்.ராம் ஐயா, கடந்த பத்தாண்டுகளில் சவுக்கு தமிழ்நாட்டில் தி இந்துவை விட அதிக புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆம், அவர் கூறும் சில விஷயங்கள் பொய்யாகி இருக்கலாம், அதற்கு அவர் பதிலளிக்க வேண்டும், ஆனால் அதில் பல உண்மையாகவும் மாறியது. மேலும் அவர் ஆளும் அரசாங்கத்திடம் கேள்விகளைக் கேட்டு வருகிறார். தமிழ்நாட்டின் பிரதான ஊடகங்கள் இதை செய்யத் தவறிவிட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.