
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கோனிமேடு பகுதியை சேர்ந்த அஜய் (31). கடந்த சில மாதங்களாக திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எக்ஸ்-ரே பிரிவில் ரேடியாலஜி டெக்னீஷியனாக பணியாற்றி வந்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்த அஜய்க்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சோழவரம் அருகே சோலையம்மன் நகரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு அஜய் அடிக்கடி சென்று வந்த போது அண்ணி தில்ஷாத்தின் அக்கா சல்மா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சல்மாவும் கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அஜய்யும், சல்மா இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஜய் சல்மாவை கொலை செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சல்மாவுடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் சல்மாவை குத்தியுள்ளார். அதனை தடுக்க சென்ற அண்ணி தில்ஷாத்தையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து அஜய் தப்பித்துள்ளார். இருவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அக்கா, தங்கை இருவரை கத்தியால் குத்தி சென்ற அஜய்யை தேடி வந்தனர். இதனிடையே தமது கள்ளக்காதலியை கத்தியால் குத்திய அஜய் போலீசுக்கு பயந்து புழல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளைஞர் ஒருவர் ஏரியில் குதிப்பதை கண்டு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் புழல் ஏரியில் இருந்து அஜய்யை சடலமாக மீட்டனர். சடலத்தை கைப்பற்றிய செங்குன்றம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலியை கத்தியால் குத்திய இளைஞர் போலீசுக்கு பயந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.