“என் மகனுக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் வரக்கூடாது”: சாலையில் 600 குழிகளை சொந்த செலவில் மூடிய காய்கறி விற்பனையாளர்

By thenmozhi gFirst Published Sep 15, 2018, 5:40 PM IST
Highlights

என் மகனுக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் வரக்கூடாது”: சாலையில் 600 குழிகளை சொந்த செலவில் மூடிய காய்கறி விற்பனையாளர்

மும்பையி்ல் சாலையில் ஏற்பட்ட குழுவில் விழுந்து பைக்கில் சென்ற தனது மகன் பலியானதைப் போல் யாரும் பலியாகிவிடக்கூடாது என்று எண்ணி, காய்கறி விற்கும் ஒருவர் தனது சொந்த செலவில் 600 குழிகளை மூடியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் தாதாராவ் பில்ஹோர். இவரின் 16 வயது மகன் பிரகாஷ் பில்ஹோர். கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை மாதம் மும்பையில் மழை காலத்தில் பிரகாஷ் மற்றும் அவரின் நண்பரும் பைக்கில் சென்றனர். அப்போது சாலையில் ஏற்பட்டிருந்த குழியில் பைக் டயர் சிக்கியதில் பிரகாஷ் தூக்கிவீசப்பட்டார். இதில் தலையில் அடிபட்டு பிரகாஷ் மூளைச்சாவு அடைந்தார். பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பிரகாஷின் நண்பர் ஹெல்ெமட் அணிந்திருந்ததால், சிறிய காயங்களுடன் தப்பித்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால், இனிமேயால் யாரும் விழுந்து உயிர்விட்டுவிடக்கூடாது என்று எண்ணி தாதாராவ் பில்ஹோர் கடந்த 3 ஆண்டுகளாக சாலையில் ஏற்பட்ட சிறு பள்ளங்களை, குழிகளை மண், ஜல்லி, சிமென்ட் போட்டு மூடிவருகிறார். இதற்காக அரசிடம் பணம் பெறாமல் தனது சொந்தமாக சம்பாதித்த பணத்தை இதற்காகச் செலவிட்டு வருகிறார்.

இது குறித்து தாதாராவ் பில்ஹோர் கூறுகையி்ல், என் மகனுக்கு ஏற்பட்ட கதி இனிமேல் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக சாலையில் ஏற்பட்ட குழிகளை, பள்ளங்களை நான் எனது சொந்த செலவில் மூடி வருகிரேன். என் மகனின் நினைவாக இந்த பணியைச் செய்கிறேன். என்னுடைய மகன் திடீரென்று இறந்தது, எனக்கு வேதனையை அளித்தது. அந்ததுக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. அவனின் நினைவாக இதைச் செய்கிறேன். இதுவரை எனது சொந்த செலவில் 600-க்கும் மேற்பட்ட குழிகளை மூடி சாலையை சரி செய்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பையைச் சேர்ந்த நவின் லாடே என்பவர் மும்பை நகரில் சாலையில் ஏற்பட்டுள்ள 27 ஆயிரம் குழிகளை புகைப்படமாக எடுத்து தனியாக இணையதளமே உருவாக்கியுள்ளார். அரசின் புள்ளிவிவரங்கள்படி ஆண்டுதோறும் சாலை குழியில் விழுந்து இறந்து 4 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

click me!