கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் அருண் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. பதவியை கூடுதலாக கவனிப்பார் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கீழ்ப்பாக்கம் டி.சி. கோபி சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி. யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுவிலக்கு எஸ்.பி செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
முன்னதாக, நேற்று (புதன்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாள சமய்சிங் மீனாவையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்... வீடியோவைப் பார்த்து தமிழக அரசைக் கண்டித்த நீதிபதி புகழேந்தி!
கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அனைவரையும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் மாறியுள்ளது. இதனிடையே, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 10 பேருக்கு மேல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசின் அலட்சியப் போக்கால் பல உயிர்கள் பலியாகியுள்ளன எனக் கண்டனம் தெரிவிதுள்ளன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை பாஜக சார்பில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று சொல்கிறார். இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
நாளைக்கே 1000 டாஸ்மாக் கடைகளை மூடணும்... முத்துசாமி ராஜினாமா செய்யணும்: அண்ணாமலை வலியுறுத்தல்