புதுக்கோட்டையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு வெளியே வந்த சவுக்கு சங்கர், பொய் வழக்கு போடுவதில் கவனம் செலுத்தும் தமிழக அரசு அதனை கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் காட்டி இருக்கலாம் என விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவரான கார்த்தி என்பவர் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் போது கார்த்தி யூட்யூபர் ச சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரையும் இரண்டாவது குற்றவாளியாக அறந்தாங்கி போலீசார் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் வழக்கு தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயபாரதி, சவுக்கு சங்கருக்கு சொந்த பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
பிணை கிடைத்த பிறகு போலீசார் அழைத்துச் சென்ற போது சவுக்கு சங்கர் “தமிழக அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காக தான் காவல்துறையை வைத்துள்ளது. தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க மேற்கொள்ளாததன் விளைவு தான் 33 உயிர்களை பலி வாங்கியுள்ளது.
கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது என்று முழக்கமிட்டார்.