Minister Ragupathy: தமிழகத்தில் எந்த சக்தியாலும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது; சட்டத்துறை அமைச்சர் பதிலடி

By Velmurugan s  |  First Published Jun 12, 2024, 4:49 PM IST

தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தினால் தான் பாஜகவை வளர்க்க முடியும் என்று இந்து மக்கள் கட்சி பிரமுகர் பேசிய ஆடியோ வைரலான நிலையில், தமிழகத்தில் யாரும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.


புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு கண்மாய் 1200 ஏக்கர் பரப்பளவை கொண்டது. மேலும் பாசனக்கண்மாயாக உள்ள கவிநாடு கண்மாயில் காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கவிநாடு கண்மாயை தூர்வார வேண்டும். கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கைஃபா என்ற தனியார் அமைப்புடன் இணைந்து கவிநாடு கண்மாயை தூர்வாரி அதில் உள்ள கருவேல மரங்களை அகற்றி பல்லுயிர் காடுகளை உருவாக்கும் பணி இன்று தொடங்கியது. இந்தப் பணியை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதனை அடுத்து 5க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரம் பணியும், கருவேல மரங்கள் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

ஆன்லைன் ரம்மியால் 7 மாதங்களில் 13 தற்கொலைகள்; தமிழர்களின் நலனில் அக்கறையே கிடையாதா? அன்புமணி ஆவேசம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கைஃபா என்ற தனியார் அமைப்புடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து கவிநாடு கண்மாய் தூர் வாரும் பணியும், கருவேல மரங்கள் அகற்றும் பணியும் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பணி நிறைவுற்ற பிறகு பல்லுயிர் காடுகளை உருவாக்கி வெளிநாட்டு பறவைகள் வரும் இடமாகவும் இது மாற்றப்பட உள்ளது. 

கடந்த ஆட்சி காலத்தில் காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டாலும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறவில்லை. அதனால் தான் இந்த பணிகள் தொய்வாக நடந்து வந்தது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவில் முடிவடையும். கடந்த ஆட்சி காலத்தில் தூர்வாரும் பணிகள் எவ்வாறு நடைபெற்றது என்பது அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியும்.

மழை ஆரம்பிக்கின்ற நேரத்தில் தான் கடந்த காலத்தில் தூர்வாரும் பணி நடைபெறும். மழை தொடங்கியுடன் பணிகள் நிறுத்தப்பட்டு நிதி செலவிடப்பட்டதாக கணக்கு எழுதப்படும். ஆனால் திமுக அரசு முறையாக தூர் வாரும் பணியை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் காடுகளை வளர்ப்பதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் காடுகளை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று முக்கியத்துவம் அளித்து செயலாற்றுகிறார். தற்போது காடுகள் இருக்கும் பரப்பளவு அதிகரித்துதான் உள்ளது குறையவில்லை.

கள்ளக்காதலனை பெண்களுடன் நெருக்கமாக பழகவிட்டு பணம் பறித்த இளம்பெண்; ஜிம்முக்குள் ஹைடெக் மோசடி

நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் அகற்றப்பட்டாலும் அகற்றப்பட்ட மரங்களுக்கு நிகராக பத்து மடங்கு மரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் தைலம் மர காடுகளால் பாதிக்கப்படுவதாக கூறியிருந்தார்கள். வனத்துறை சார்பில் பயிரிடப்பட்ட தைலம் மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களை பறிமுதல் செய்து எங்கேயும் சோலார் பிளான்ட்கள் அமைக்கப்படுவது கிடையாது. அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களிடமே அந்த நிலம் மீட்டுக் கொடுக்கப்படும்.

நீட் தேர்வு குளறுபடி இன்று நாடே பார்த்துக் கொண்டுள்ளது. இதுகுறித்து வழக்கும் நடைபெற்று வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க கூறியுள்ளது. இருப்பினும் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இது முடிந்த பிறகு நீட் தேர்வுக்கு ஒரு முடிவு வரும். 

கலவரம் ஏற்படுத்தினால் தான் பாஜக வளர முடியும் என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூறிய ஆடியோ வைரலான நிலையில் இதுகுறித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது. ஒருபோதும் தமிழ்நாடு அரசு அதை அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

click me!