கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடிகர் விஜய் ரகசியமாக சென்று வருவதற்கான திட்டம் தயாராகி வருகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடிகர் விஜய் ரகசியமாக சென்று வருவதற்கான திட்டம் தயாராகி வருகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வரை ரகசியமாக சென்று தேவையுடையோருக்கு உதவிகள் செய்வது நடிகர் விஜயின் வழக்கமாக உள்ளது. மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டு இளைஞர்களுடன் இளைஞனாக அமர்ந்து தனது ஆதரவை தெரிவித்துவிட்டு திரும்பினார் விஜய்.
undefined
இதே போல் நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு ரகசியமாக சென்று ஆறுதல் கூறியதோடு தேவையான உதவிகளையும் விஜய் செய்துவிட்டு திரும்பினார். தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் இரவோடு இரவாக விஜய் சந்தித்து ஆறுதல் கூறியது அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தான் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை செய்ய தனது ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் வங்கி கணக்குகளில் தலா நான்கரை லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார் விஜய். விஜய் செலுத்தி பணத்தின் மூலம் நிவாரண உதவிகளை முன்னெடுத்துள்ள அவரது ரசிகர்கள் அடுத்ததாக விஜயின் வரவிற்காக காத்திருக்கின்றனர்.
வழக்கம் போல் இந்த முறையும் இரவோடு இரவாக வந்த புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், எங்கு செல்லலாம், எப்போது செல்லலாம் என்று ஆராய்ந்து கூறுமாறு நாகை மாவட்ட ரசிகர் மன்றத்திற்கு தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்தும் ஓ.கே என்று ஆகிவிட்டால் அடுத்த வாரம் விஜய் நாகைக்கு செல்வார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.