Chennai Floods: சென்னையில் 65,000 வீடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை… மக்கள் 'ஷாக்'

By manimegalai aFirst Published Nov 11, 2021, 6:09 PM IST
Highlights

சென்னையில் கிட்டத்தட்ட 65000 வீடுகள் மழை, வெள்ளத்தால் இருளில் மூழ்கியுள்ள விவரம் வெளிவந்திருக்கிறது.

சென்னை: சென்னையில் கிட்டத்தட்ட 65000 வீடுகள் மழை, வெள்ளத்தால் இருளில் மூழ்கியுள்ள விவரம் வெளிவந்திருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மக்களையும், அரசையும் இந்தபாடு படுத்தும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்கள். மானிட கணக்கை விட எப்போதுமே இயற்கையின் கணக்கு வேறாக இருக்கும். அதற்கு சென்னையில் அடித்து ஊத்திய மழையை சொல்லலாம்.

தலைநகர் சென்னை 2015ம் ஆண்டு நடந்த இயற்கை சீற்றத்தை போன்று மீண்டும் தாங்காது என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது அதை விட அதிக மழையையும், வெள்ளத்தையும் சந்தித்துள்ளது. சென்னையில் மழை என்ற பேச்ச கடந்த ஒரு வாரமாக மாறி, மழைக்குள் சென்னை என்ற நிலைமை தோன்றி இருக்கிறது.

வங்கக்கடலில் மையமாகி சென்னையில் மெய்யாகி பொழிந்து தள்ளிய மழையால் காய்ந்த, புழுதி பறக்கும் பூமி என்பது மாறி, வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர் சென்னை என்ற நிலைமை உருவாகி இருக்கிறது.

சென்னையில் சுரங்கபாதைகளில் தண்ணீர், போக்குவரத்து நிறுத்தம், மாற்றம், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவிப்பு என மக்கள் மிரண்டு தான் போயிருக்கின்றனர்.

சாதாரண தனிவீடுகள் என்று மட்டும் அல்லாது அடுக்குமாடி குடியிருப்புகளையும் இந்த மழை சற்று அசைத்து பார்த்துள்ளது. குடியிருப்புகள் நீரால் சூழப்பட ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் வாழ்வாதாரத்தை இழந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

சென்னையில் முக்கிய பகுதிகளில் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது. மீட்பு பணிகள் ஒரு பக்கம் கன ஜரூராக இருந்தாலும் அதற்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் மழை மேலும் அதிகரித்து வருகிறது.

பலத்த காற்று, மழை என சென்னை நகரம் தத்தளிப்புக்கு ஆளாகி உள்ள அதே தருணத்தில் கிட்டத்தட்ட 65000 வீடுகளுக்கு ஏற்பட்ட நிலைமையால் மக்கள் தவிப்பு ஆளாகி உள்ளனர்.கிட்டத்தட்ட 65000 வீடுகளுக்கு இப்போது வரை மின் விநியோகம் இல்லை.

கரண்ட் இன்றி எந்த வேலையும் செய்ய முடியாமலும், மழைநீருடன் கலந்த கழிவு நீர், துர்நாற்றம் என பல பகுதிகளில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கனமழை முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வியாசர்பாடி, தி நகர், அசோக் நகர், கோயம்பேடு, மாம்பலம், பெரம்பூர் என பல பகுதிகள் இன்னமும் இருளில் தான் இருக்கின்றன.

கேப் விடாமல் போட்டு தாக்கும் பலத்த மழை, வெள்ள நீர் ஆகியவற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கு மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது, நிலைமை சீரான பின்னர் மின் வினியோகம் தொடங்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மழையின் வேகம் அதிகரிக்க, மக்களின் தவிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னை மட்டுமல்லாது, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய அண்டை மாவட்டங்களிலும் பல பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டு உள்ளது.

இயல்புக்கு மீறிய அல்லது மாறான மழை என்று கூறப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் மீண்டு வர பல நாட்கள் ஆகும் என்பது தான் தற்போதைய நிலைமை..!

click me!