தீபாவளிக்கு இன்று ஊருக்குப் போறீங்களா? 1,844 ஸ்பெஷல் பஸ் விடுறாங்க; லேட்டா போயி பஸ்ஸ மிஸ் பண்ணிடாதீங்க!

First Published Oct 16, 2017, 1:19 PM IST
Highlights
1844 special bus services run today to meet passengers satisfaction


தீபாவளி பண்டிகை உற்சாகம் களை கட்டியுள்ள நிலையில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வேலை விஷயமாக வந்து தங்கியிருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகிறார்கள். அதனால், வழக்கமான பஸ் போக்குவரத்துடன் கூட, சிறப்புப் பேருந்துகளை அவர்களின் வசதிக்காக இயக்க ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு. 

இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்த போது...
வரும் புதன் கிழமை தீபாவளிப் பண்டிகை வருகிறது. இதனால் திங்கள் கிழமை இன்றுதான் பெரும்பாலான பேர் ஊர்களுக்குத் திரும்ப விரும்புவார்கள். இன்று மாலை 4 மணிக்கு மேல், தென் மாவட்டங்கள், மேற்கு மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவர்கள் அதிகமான அளவில் இருப்பார்கள் என்பதால், திங்கள்கிழமை இன்று சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும், 1,844 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், வழக்கமாக இயங்கும் 4,119 பேருந்துகளும் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்கு வசதியாக,  தமிழக அரசு இந்த முறை 11,645 சிறப்புப் பேருந்துகளை சென்னையில் இருந்து இயக்குகிறது. ஞாயிற்றுக்கிழமை நேற்று கோயம்பேடு உள்பட 5 இடங்களில் இருந்து 788 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 3,063 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் காரணத்தால், ஓரளவு பயணிகள் சிரமத்தைக் குறைக்க வழி செய்யப்பட்டது என்பதுடன், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்தது. 

இந்நிலையில், திங்கள்கிழமை இன்று 1,844 சிறப்புப் பேருந்துகள் உள்பட 4,119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டுமல்ல... திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் மற்ற பெரிய நகரங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்ய வேண்டும் என்று பயணிகளின் செல்பேசி எண்களில் எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பப்படுகிறது.

சென்னையைப் பொறுத்த வரை, முக்கிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள 1, 2வது நடைமேடைகளில் இருந்து முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

திருவண்ணாமலை, அரியலூர், ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், திருத்தணி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் இங்கிருந்து செல்லலாம். மேலும், 7, 8, 9 ஆகிய நடைமேடைகள் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்தும் முன்பதிவு செய்யப்படாத விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூருக்குச் செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து புறப்படும்.

நடைமேடைகள் 3, 4, 5, 6 ஆகியவற்றில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும். திருச்சி, தஞ்சாவூர், சேலம், கரூர், சிவகங்கை, கம்பம், மதுரை, கோவை, ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களுக்குச் செல்லும் முன்பதிவு செய்யப்பட்ட விரைவுப் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும் என்று கூறினர். 

வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் இருக்கும் கோயம்பேடு நூறடி சாலை, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று முன்பதிவு செய்யப்பட்ட எக்ஸ்ப்ரஸ் பஸ்களில் செல்ல வேண்டும் என்றால், சற்று முன்னதாகவே சென்று விடுவது நல்லது. 

click me!