
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் மைதானத்தில் இருசக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக குடியாத்தம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் குடியாத்தம் நகர ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான காவல் துறையினர் விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் மகன் அஜித்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து கஞ்சாப் பொட்டலங்கள் மற்றும் 5 லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.